மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? – விக்கி

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.

மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், காவல்துறையினருக்கும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று காவல்துறையினரால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்? அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? காவல்துறையினர் ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும் என தெரிவித்துள்ளார்.