விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை-டக்ளஸ்

1 DAKLAS
1 DAKLAS


இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கு எதிரான- விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என கேள்வியெழுப்பியிருந்த க.வி.விக்னேஸ்வரன், அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் நேற்று முன்தினம் விடியற்காலையில் காவற்தறையினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே,

(i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும்

(iii) சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், காவற்துறையினரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.

மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் காவற்துறையினர் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் காவற்துறை திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை காவற்துறை திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும். இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதோடு அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? காவற்துறையினர் மக்கள் காவற்துறையினரா ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்“ எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,

“நான் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயற்பட்டு வருகிறேன். இரு தரப்பும் எதிரும் புதிருமாக செயற்பட்டு, மீண்டும் அழிவுகரமான சூழல் ஒன்று ஏற்படும் நிலைமையை உருவாக்கக்கூடாது. அப்படியான நிலைமை ஏற்படாமல் தடுக்கும் பொறுப்புணர்வு எனக்குமுண்டு. அதையே நான் நிறைவேற்றி வருகிறேன். அதை அரசும் அறியும். காவற்துறையினரும் அறிவார்கள்.

இணநல்லிணகத்திற்கு எதிராக செயற்படும் விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிப்பது எனது வழக்கமல்ல என கூறினார்.

அத்துடன் யாழ் மாநகரசபையை அமைப்பதில் மணிவண்ணன் தரப்பிற்கு நாங்களும் ஆதரவளித்தோம். அந்த சபையை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புள்ளது.

அதுதவிர, ஒரு பொறுப்புள்ள தமிழ் கட்சி தலைவர் என்ற அடிப்படையில், பிரச்சனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்டு சரியான வழியில் அவர்களை தொடர்ந்து செயற்பட வைக்கும் பொறுப்பும் உள்ளது.

நாம் நீண்டகாலமாக அதை செய்து வருகிறோம். குறிப்பாக யுத்த காலத்திலும் அதை அதிகளவில் செய்தோம். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இப்படியான நெருக்கடிக்குள் சிக்கும் போது, என்னிடம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். ஆனால் அவர்கள் யாரும் வெளியில் சொல்லாததால் விக்னேஸ்வரன் போன்றவர்களிற்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

இப்பொழுது ரியூப் தமிழ் நிறுவனமும் என்னை தொடர்பு கொண்டு பேசியது. கைது செய்யப்பட்ட தமது நிறுவனத்தை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய உதவும்படியும், தாம் இனி பிரச்சனையின்றி செயற்படுவதாகவும் கூறுகிறார்கள்.

இதுவரை இப்படி ஏராளமானவர்கள் என்னிடம் வருகிறார்கள். பிரச்சனையில் சிக்கியவர்கள் வெளியில் வருகிறார்கள். அதில் ஒருவரே மணிவண்ணன் எனவும் டக்ளஸ் கூறினார்.