இவ்வருடம் இதுவரை வாகன விபத்துக்களில் 580 பேர் பலி!

44289716 accident word in cracked 3d red letters to illustrate a crash or collision as a result of an automob 1
44289716 accident word in cracked 3d red letters to illustrate a crash or collision as a result of an automob 1

2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வாகன விபத்துக்களில் 580 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாத்திரம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஐந்து வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழ் – சிங்களப் புத்தாண்டு காரணமாக இலங்கையில் ஏப்ரல் மாதம் மிகவும் பரபரப்பான மாதமாகக் காணப்படுகின்றது எனவும், இதனால் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, தனியார் பேருந்துகளின் சாரதிகளைக் கண்காணிப்பதற்குச் சிவில் உடையில் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புத்தாண்டு காலப்பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்துகொள்ள வேண்டும் என்றும், இந்தக் காலப்பகுதியில் போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.