அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்

kotta 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும்  சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசிலுள்ள எவரும் இதற்குத் துணைபோகக்கூடாது.என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.  

ஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர். ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது என்றும், அரசு விரைவில் கவிழும் என்றும் எதிரணியினர் சிங்கள ஊடகங்களிடம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசிலுள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால், அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகக்கூடாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக  – பலம் மிக்க தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். பங்காளிக் கட்சிகள் தங்கள் குறைநிறைகளை அவருடன் நேரில் பேசித் தீர்த்துக்கொள்ள  முடியும்.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.

மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள். இது கடந்த கால வரலாறு.

எதிரணியின் சதி முயற்சிகளை நாம் ஓரணியில் நின்று தோற்கடிக்க வேண்டும் – என்றார்.