இப்புத்தாண்டு நாளில் இறைவனை பிரார்த்திப்போம் – ஐங்கரநேசன்

Ayngaranesan 2
Ayngaranesan 2

தமிழினம் தைப்பொங்கல் திருநாளைத் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடிவரும் அதேவேளை சித்திரைப் புத்தாண்டையும் தமிழர்களின் ஓர் திருநாளாகக் கொண்டாடுவதை மரபாகக் கொண்டிருக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

மனிதன் இப்பூமி தனக்குரியது மாத்திரமே என்ற மனித மையவாதச் சிந்தனையின் வயப்பட்டு இயற்கையின் பல்வகைமைத் தன்மையை நிராகரித்து வருகிறான். மனிதன் உயிரினங்களை அழித்தும், இயற்கை வளங்களைச் சூறையாடியும் பூமித்தாயில் ஓர் ஒட்டுண்ணியாக வாழ்வதன் விளைவாக இயற்கை தன்னைப் பேரழிவிலிருந்து காப்பாற்றி ஏனைய உயிர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கான எச்சரிக்கையே கொரோனா வைரசுவின் பிரசவம் ஆகும். இலங்கைத் தீவில் சிங்கள, பௌத்த பேரினவாதம் பல்லினத்துவத்தை, பன்மதத்தை நிராகரித்து இலங்கையைத் தனித்த ஓர் பௌத்த, சிங்கள நாடாகக் கட்டமைத்து வருகின்றது. சிறுபான்மை இனங்களின் வாழ்விட, சமூக, மத, அரசியல் உரிமைகளை நிராகரித்துப் வருகின்றது. இவற்றின் முற்றுகையினுள்ளேயே தமிழ் மக்களுக்குப் பிலவ வருடம் பிறந்திருக்கிறது.

கொரோனாப் பெருங்கொள்ளை நோயிலிருந்து விடுபடவும், பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடவும், இப்புத்தாண்டு நாளில் இயற்கை என்ற பேரிறைவனைப் பிரார்த்திப்போமாக! என்றும் குறிப்பிட்டுள்ளார்.