கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா?

tna 01
tna 01

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன் படிக்கைக்கு அமைய தமிழீழ விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்கும் நோக்கோடு அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

அந்தவகையில் குறித்த பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு நாளை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 09.04.2021 அன்று வெளியிடப்பட்ட, 2222/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெறுமென அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந் நிலையிலேயே நாளை தவிசாளருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது இந்நிலையில் புதிய தவிசாளர் தேர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தோர் ஒன்றுகூடி, கலந்துரையாடல் ஒன்றினை நேற்று நடாத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்ற பொதுஜன பெரமுண கட்சியும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பு -09, ஈழமக்கள் ஜனநாயக கட்சி -02, தமிழர் விடுதலை கூட்டணி-02, சுயேட்சை குழு-03, பொதுஜன பெரமுன -02, சிறிலங்கா சுதந்திர கட்சி -01,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -01,ஐக்கிய தேசிய கட்சி -03,சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -01 என 24 உறுப்பினர்கள் உள்ள சபையில் நாளை மூவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பாக்கப்படுகிறது

இரகசிய வாக்கெடுப்பு கோரி தவிசாளர் பதவியை மாற்றுவதற்கான கடும் அரசியல் போட்டிகளுக்குள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா? என்ற பரபரப்புக்கு மத்தியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.