மஹிந்த திறந்துள்ள கதவின் ஊடாக எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்; அரசின் அதிருப்தியாளர்களுக்குச் சஜித் அழைப்பு!

491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1
491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1

மஹிந்த ராஜபக்ச திறந்துள்ள கதவைப் பயன்படுத்தி அரசின் அதிருப்தியாளர்கள் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். விரைவில் மலரும் எமது ஜனநாயக ஆட்சியில் பங்காளிகளாகுங்கள்.என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘அரசின் திட்டங்களை அரசுக்குள் இருந்து விமர்சிப்பவர்கள் அரசிலிருந்து தாராளமாக வெளியேறலாம். கதவு திறந்துதான் உள்ளது’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது காரசாரமாகத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மஹிந்தவின் இந்தக் கருத்துத் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசின் உள்வீட்டுப் பிரச்சினை இன்று பூகம்பமாகி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரதமர் மஹிந்தவின் இந்தக் கருத்துக்களிலிருந்து அரசின் குழப்பங்கள் சந்திக்கு வந்துள்ளன.

தனக்கு கீழ் இருக்கின்ற அமைச்சர்களையும், பங்காளிக் கட்சி தலைவர்களையும் கட்டுப்படுத்த முடியாத பிரதமர் இந்த நாட்டை எப்படி முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லப் போகின்றார்.

அரசு ஆட்டம் காணத் தொடங்கியுள்ள இந்தச் சூழலில்தான் பிரதமரின் சீற்றமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அரச தலைமை ஒழுங்கான பாதையில் பயணித்திருந்தால் அதற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது.

பிரதமர் மஹிந்த திறந்துள்ள கதவைப் பயன்படுத்தி வெளியேற விரும்புவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம். நாட்டு மக்கள் விரும்புகின்ற சர்வதேசம் திரும்பிப் பார்க்கின்ற நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய பலம் மிக்க ஜனநாயக ஆட்சியை நிறுவ நாம் தயாராக இருக்கின்றோம். அது விரைவில் மலரும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. எனவே, அரசிலுள்ள அதிருப்தியாளர்களுக்கு எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கும் பலம்மிக்க ஆட்சியை நிறுவ நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.