நாடெங்கும் பல பகுதிகள் முடக்கம்; பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு!

1595510689 corona outbreak 2 1
1595510689 corona outbreak 2 1

இலங்கையில் மற்றுமொரு புதிய கொரோனாக் கொத்தணி உருவாகி தாண்டமாடுகின்றது. இன்று மாத்திரம் 1,531 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நாள் ஒன்றில் அதிகளவான தொற்றாளர்கள் இன்றே இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொரோனாக் கொத்தணியில் பதிவாகியுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றுமுன்தினம் தொடக்கம் இன்று வரையான மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக எகிறியுள்ளது.

புதிய கொரோனா கொத்தணியின் தீவிரத்தையடுத்து நாடெங்கும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேவேளை, நாடெங்கும் எழுந்தமான பி.சி.ஆர். பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், 362 பேர் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 378 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.