காலநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள்-கோட்டாபய

download 2 1
download 2 1

காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும் என்பதால் அதன் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடி ஒத்தழைப்பு தேவைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48ஆவது கூட்டத்தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு நாடுகளும் வகுக்க வேண்டும்.

விவசாயச் சூழலியலைக் கைக்கொள்வதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் ஒரு முக்கிய பகுதியாகும்.

நாம் வாழும் உலகின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மனித சமூகத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்ற தயங்கக்கூடாது.

இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ
வேண்டும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி
செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எமது இந்த முடிவு பரந்துபட்ட சூழலியல் பிரச்சினைகள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுச்சுகாதார கரிசனைகளை கவனத்திற்கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப்பொருட்களின் பயன்பாடு பொது மக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

பல தசாப்தங்களாக இவற்றை அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, இலங்கையின் மையப்பகுதிகளில் நீடித்த நோய்கள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாரியளவில் சந்தைகளை ஆக்கிரமித்துள்ள விவசாய இரசாயனப்பொருட்கள் மற்றும் விவசாயிகளிடையே போதியளவு அறிவின்மை காரணமாக, இலங்கையில் பயன்படுத்தப்படும் நைதரசன் உரங்களில் சுமார் 80 வீதமானவை விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சும் உரங்கள் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன.

இது மண்ணின் தரம் குறைவதற்கும் நீர் மாசுபடுவதற்கும் காரணமாக அமைவதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கச்செய்கிறது.

இதன் காரணமாக செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, ஆரோக்கியமான மற்றும் சூழலியல் ரீதியாகச் சிறந்த சேதன விவசாய முறைக்கு நீண்டகாலத் தேவைப்பாடாக இருந்துவரும் தேசிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இந்த மாற்றத்தின் போது, குறுகியகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். எனினும் அதற்காக எமது தீர்மானத்தில் மாற்றத்தை கொண்டுவரமாட்டோம் என அவர் தெரிவித்தார்.