தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் செ.கஜேந்திரன்

IMG 7771
IMG 7771

சிறைச்சாலையில் மனிதநேயமற்ற வகையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சென்று பார்வையிடுவதற்கு சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கான அனுமதியை தரவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம்.ஆனாலும் நாங்க்ள பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கமுடியாது என சிறைச்சாலை அதிகாரிகள் கூறினார்கள். தற்போதுள்ள கொவிட் சூழலில் சிறையில் உள்ளவர்களை பார்வையிடுவதற்கு அனுமதியில்லையென்று தெரிவிக்கப்பட்டது. கடந்த காலத்தில் பலர் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இந்த சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை தங்களது முகப்புத்தகங்களில் பகிர்ந்தார்கள் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டவர்களும்,கடந்த மே மாதம் 18ஆம் திகதி 2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் படுகொலைசெய்யப்பட்ட தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தமைக்காக 10பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதனைவிட மேலும் சிலர் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர். அவர்களின் நிலைமையென்ன,அவர்களின் சுகாதார நிலையென்ன என்பது தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர். உறவினர்கள் அவர்களை பார்வையிடமுடியாத நிலையில் மிகுந்த பதற்றமடைந்துள்ளனர்.

கைதிகள் நெருக்கமான இடங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்களா என்ற கவலை அவர்கள்மத்தியில் அதிகரித்துள்ளது.அதனடிப்படையில் உறவினர்கள் சிலர் எனது கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் நேரில் சென்று பார்த்து நிலைமையினை அறிவதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.கடந்த மே 18ஆம் திகதி தமிழ் மக்களின் இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகளில் பங்குகொண்டற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதென்பது அப்பட்டமாக தமிழர்களின் ஜனநாயக உரிமையினை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது வெளிப்படுகின்றது.

மனிதநேயமற்ற வகையில் காவல்துறையினர் இவர்களை கைதுசெய்து மோசமான கொடிய சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் ஐநா.பேரவை கூட்டத்தொடரிலே 46:1 தீர்மானத்தினை தமிழர் தரப்பினை பயன்படுத்தி நிறைவேற்றியதன் மூலம் சர்வதேச விசாரணைக்கு செல்வதிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளனர். பொறுப்புக்கூறலில் எந்தவித முன்னேற்றத்தினையும் 2012ஆம் ஆண்டிலிருந்து காட்டிராத போதிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லப்படாமல் தொடர்ந்து உள்ளக விசாரணையென்ற போர்வையில் முடக்கிவிட தமிழ் தரப்பு துணைநின்ற நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு செல்வதிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான ஓடுக்குமுறைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.இதனை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நிலைமைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையினை நினைவுகூரும் வகையில் கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைக்கல் ஒன்று நடுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.எடுத்துச்சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் இராணுவமும் காவல்துறையினரும் சூழ்ந்து நின்றனர்.மறுநாள் செல்கின்றபோது அந்த கல்லை காணவில்லை. அது நிச்சயமாக இராணுவத்தினரால்தான் எடுத்துச்செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அனைவரது சந்தேகமுமாகும்.அது தொடர்பான முறைப்பாட்டினை செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தமைக்காக அப்பாவி பெண்கள் உட்பட குடும்ப சுமைகளை சுமக்கும் பத்து பேரை கொண்டுவந்து ஈவிரக்கமில்லாமல் அடைத்துவைத்திருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.