இலங்கை அரசுக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றியது ஐரோப்பிய நாடாளுமன்றம்

download 22
download 22

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நேற்று நிறைவேற்றியுள்ளது.

மேலும், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதற்கான போதிய காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறும் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெய்ன் – மொக்ரோ எல்லைப் பகுதி, ரஷ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் எனவும் தீர்மானம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கைவிடுவது, மறு ஆய்வு செய்வது குறித்த தங்களது வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும், சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றும் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே 2017இல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீளப்பெற்றுக்கொண்டது எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஒரு செல்வாக்குச் செலுத்தும் விடயமாக ஐரோப்பிய ஆணைக்குழுவும் ஐரோப்பிய வெளிநாட்டு செயற்பாட்டு சேவையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதி முயற்சியாக இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.