ராஜபக்ச அரசைக் காக்கவே சபைக்கு வருகின்றார் ரணில் சஜித் அணி சாட்டையடி!

RANJITH
RANJITH

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது.

-என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கை தெரிவித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பிலும், ரணிலின் நாடாளுமன்ற வருகை சம்பந்தமாகவும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, ஒரு குழு தம்முடன் இணையவுள்ளது என்றெல்லாம் ராஜபக்ச அரசும், இந்த அரசுக்குச் சார்பானவர்களும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்பதை நிரூபிப்பதற்காகவும், கட்சி உறுப்பினர்கள் சஜித் பக்கமே இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவுமே நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர். அரசின் தேவைக்கேற்ப செயற்படக்கூடிய ஒருவர். ஏதேனும் ஒரு விதத்தில் பயன்பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசு, பாதுகாப்பு வழங்கி வைத்துள்ளது.

எனவே, ரணிலின் கருத்தை நம்புவதற்கு மக்கள் இனியும் தயாரில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றம் வருவது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக அமையாது – என்றார்.