கொரோனாத் தொற்றைவிட பெருந்தொற்று ராஜபக்ச அரசு! – அதனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் ரணில்

1540963163 6933965 hirunews ranil
1540963163 6933965 hirunews ranil

கொரோனாவை விடப் பெருந்தொற்றாக ராஜபக்ச அரசு மாறியுள்ளது. முதலில் இந்த அரசைக் கட்டுப்படுத்தினால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில், கொரோனா இந்நாட்டில் தாண்டவமாட இந்த அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளே காரணம்.

என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமது அரசியல் இலாபத்துக்காக நாட்டை ஆரம்பத்தில் முடக்காமல் வைத்துவிட்டு இறுதியில் கொரோனா வைரஸ் வீடுகளுக்குள் நுழைந்த பின்னர்தான் இந்த அரசு முழு முடக்கத்தை அறிவித்தது.

அதனால்தான் பயணக் கட்டுப்பாட்டு காலத்திலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் நாள்தோறும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் 50 ஐத் தாண்டுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தவுள்ளதாக தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் திரிபடைந்த கொடிய வைரஸ், பிரிட்டனில் உருவாகிய ஆபத்தான வைரஸ் என வெளிநாடுகளின் வைரஸ்கள் நாட்டுக்குள் நுழைந்து சமூகத்தில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லை கட்டுமீறிப்போன பின்னர் நாட்டை அரைகுறைக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து முடக்கி என்ன பயன்? முடக்கத்தை நீக்கி என்ன பயன்?
பொதுமக்களை ஒருபக்கம் கொரோனாவுக்கு இரையாக்கி – மறுபக்கம் பட்டினி அவலத்துக்குள் அவர்களைத் தள்ளி நாட்டை நாசமாக்கிக்கொண்டிருக்கும் ராஜபக்ச அரசைத்தான் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முதலில் அடக்க வேண்டும். அதற்காகவே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன். ஒரு சிலர் குறிப்பிடுவதுபோல் ராஜபக்சக்களுடன் ‘டீல்’ போட்டுக்கொண்டு நான் நாடாளுமன்றம் செல்லவில்லை – என்றார்.