அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – கப்ரால்

Ajith Nivard cabraal
Ajith Nivard cabraal

பிச்சைக்காரனின் காயத்தை சுகமாக்க செல்லும் போது அந்தப் பிச்சைக்காரன் குழப்பமடைவதை போன்றே அரசியல் கைதிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழப்பமடைந்து நடந்துகொள்கின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான்  11 வருடங்களாக செய்த வேலைகள் தொடர்பாக கூறினர். 

நீண்ட காலமாக கேட்டுவந்தவை இப்போது நடக்கப் போகும் போது, பிச்சைக்காரனின் காயத்தை சுகமாக்க முயற்சிக்கையில், அந்த பிச்சைக்காரன் சிலவேளை குழப்பம் அடைவார். 

அதேபோன்றே இன்றும் அவர் சபையில் குழப்பமடைந்து பேசியது அவதானிக்க முடிந்தது. காயத்தை வைத்து அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளில்  ஈடுபட வேண்டும் என்பதனால் அவர்கள் குழப்பமடைவது வழமையானதே.

இந்த பிரச்சனையை தீர்த்தால் உங்களின் எதிர்காலமும் இல்லாமல் போய்விடும் என்று எங்களுக்குத் தெரியும். 

உங்களின் முழு எதிர்காலமும் பிச்சைக் காரனின் காயத்தை போன்றே உள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விருப்பமில்லை என்றார்.