ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினைக்கு பாதீட்டின் ஊடாக நடவடிக்கை – ரமேஸ் பத்திரன

Ramesh.Pathirana.000
Ramesh.Pathirana.000

ஆசிரியர் சங்கம் ஆசிரியர், அதிபர் சங்க பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி தமது சங்கத்தினர் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கல்வி அமைச்சர் ஜ.எல்.பீரிஸ்க்கும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

அதில் உரிய தீர்வொன்று முன்வைக்கப்படாத நிலையில், இன்றைய தினம் பிரதமரை சந்தித்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த நிலையில், அதிபர், ஆசிரியர்களின் வேதனப்பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இன்றைய சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினைக்கு அடுத்த வருட பாதீட்டின் ஊடாக முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து பல்கலைகழக பேராசிரியர் ஐக்கிய சம்மேளனம் நாளைமுதல் விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.