46/1 தீர்மானம் தொடர்பாக ஐ.நாவுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

europian union
europian union

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 46/1 நிறுவப்பட்ட அனைத்து வெளியக முன்மொழிவுகளையும் நிராகரிப்பதாக ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், இணையவழி காணொளி மூலம் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் தாம் முன்வைத்த அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 46 இன்கீழ் ஒன்றின்படி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் தேவை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் கட்டமைப்பை ஆதரிக்காத அரசாங்கத்தின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமை நியமங்களுக்கு ஏற்ப அது அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரத்தை முன்னகர்த்தி செல்லும் இணை அனுசரனை நாடுகள், இலங்கையின் நிலவரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

பிரத்தானியா, கனடா, ஜேர்மனி, வடக்கு மஸிடோனியா, மலாவி, மொண்டிநீக்ரோ முதலான ஆறு நாடுகள் சார்பில், ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானிய தூதுவர் சைமன் மென்லே மனித உரிமைகள் மாநாட்டில் நேற்று உரையாற்றியுள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றிய நீண்டகால கரிசனைகள் தொடர்ந்தும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்த இணை அனுசரனை நாடுகள், தீர்மானம் 46 இன்கீழ் 1 ஐ செயற்படுத்த உறுப்பு நாடுகள், தேவையான வளங்களை மனித உரிமைகள் பேரவைக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட்-19 பரவலால் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்களை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும், அதனால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகவும் இணை அனுசரனை நாடுகள் தெரிவித்துள்ளன.

விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை தாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் இலங்கையின் அறிவிக்கப்பட்ட நோக்கத்தை தாங்கள் கவனிப்பதாகவும் இணை அனுசரனை நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த அலுவலங்களின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தமாறு அரசாங்கத்துக்கு தாங்கள் அழைப்பு விடுப்பதாகவும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.