உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதி கிட்ட வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

IMG 20201202 WA0004 1 1 1
IMG 20201202 WA0004 1 1 1

பதவி விலகிய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதியும் கிட்ட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (16) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறைச்சாலை புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரின் பதவி விலகல் நீதியை எதிர்பார்ப்பது கண்களில் மண்ணை தூவுவதாக அமைந்து விடக்கூடாது. பதவி விலகிய இராஜாங்க அமைச்சரின் செயல்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களுக்கும் நீதியும் கிட்ட வேண்டும்.
லொஹான் தலுவத்தை மீது மதுபோதையில் இருந்தமை, அரசியல் கைதி சுலக்சனை மண்டியிடச் செய்தமை, கை துப்பாக்கியை நெற்றியில் வைத்தமை, மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, குடிபோதையில் இருந்தவர்களையும் சிறைச்சாலைக்குள் அழைத்து சென்றமை, அவசர தேவை இன்றி சிறைச்சாலைக்குள் அகால நேரத்தில் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் சுமத்தப்படுகின்றது.

சம்பவம் நடந்தபோது சிறைச்சாலை அதிகாரிகள் அருகில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் சம்பவத்தை தடுத்திருக்கலாம் அதனையும் செய்யாது சம்பவத்தை பதிவு செய்து மேலிடத்துக்கு உடனடியாக அறிவிக்காதது போன்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன.குற்றச் சாட்டுக்கு உள்ளாகின்ற அத்தனை பேர் மீதும் உரிய விசாரணை முன்னெடுக்கப்படல் வேண்டும்.அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதோடு, லொஹான் தலுவத்தையின் ஏனைய இராஜாங்க அமைச்சு பதவியும் பறிக்கப்படல்வேண்டும். அதுவே நீதியை எதிர் பார்ப்போருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இதனையும் விட இச் சம்பவத்தால் அனைத்து அரசியல் கைதிகளும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். குறிப்பாக அனுராதபுர அரசியல் கைதிகள் அவர்களின் உள ரீதியான பாதிப்பு மதிப்பிட முடியாது அவர்களுக்கு நீதி கிட்டுவதன் முதல் அடையாளமாக அனுராதபுர சிறையில் இருந்து பாதுகாப்பான யாழ்பாண சிறைக்கு அவர்களை மாற்ற வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோள் விடுக்கின்றது.


அத்தோடு உளவியல் ரீதியாக நேரடியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதியான சுலக்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு இதனால் பாதிக்கப்பட்டவருக்கு அவர் எதிர்பார்க்கும் நட்ட ஈட்டை வழங்க வேண்டும்.  ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் பயங்கர வாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் காலமும் அரசியல் விடுதலை செய்வதற்கான கால உத்திரவாதமும் நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளுக்கும், ஏனைய கைதிகளுக்கும், பொதுவாக நாட்டில் அனைத்து அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கருத்து சுதந்திரத்துக்கான பாதுகாப்போடு, வாழ்வு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது