காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது

1631857816 kili zoom 2
1631857816 kili zoom 2

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்டுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒப்புதல் இன்றி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவையும் இடம்பெறக் கூடாது என்றும் அமைச்சரினால் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே, மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பிரமனந்தனாறு பிரதேசத்தில் எதுவித அறிவித்தலும் இன்றி, வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் காணிகள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பிரதேச செயலளார் திரு.பிருந்தாகரனினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்ற செயற்பாடு கரைச்சிப் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைமடுப் பகுதியிலும் இடம்பெறுவதாவும் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டபபட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய சுற்றிக்கையின் பிரகாரம், வனப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் ஆகியவற்றின் திணைக்களங்களினால் காணிகள் புதிதாக அடையாளப்படுத்தப்படுகின்ற போது பிரதேச செயலாளர்களின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுதுடன், பிரதேச செயலாளர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் வரையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிக்கு தெரிவித்தார்.

இதேபோல், இவ்வாண்டு மே 31ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கிளிநொச்சி மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் புதிதாக காணிகள் எதனையும் யாருக்கும் வழங்குவதாக இருந்தால், மாவட்டச் செயலாளரின் அனுமதி பெறப்படவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட முன்னர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர் தலைமையில் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தை கலந்துரையாடலில் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை முறையாகப் பின்பற்றுமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழு யாழ் மாவட்டப் பணிப்பாளர் விமலன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சுமார் 325 பயனாளிகள் இருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் பிரதேச மக்களினால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்ற சுமார் 300 ஏக்கர் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் இதுவரையில் 40 ஏக்கர் காணிகள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக கரைச்சிப் பிரதேச செயலாளரினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனப் பாதுகாப்பு அதிகாரி, பிரதேச செயலாளரின் கோரிக்கை தமது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் பொருத்தமான காணிகளை பிரதேச செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.