கொரோனாவின் 5ஆவது அலை; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

gmoa 1
gmoa 1

இலங்கையில் கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஆறு பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

கொரோனாவின் நான்காம் அலையின் தாக்கம் இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், ஐந்தாம் அலை இன்னும் சில மாதங்களில் தாக்கக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் தீவிரம் குறைந்த பிறகு அலட்சியமாக இருந்ததே நான்காம் அலையில் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்தவகையில், அடுத்து வரும் ஐந்தாம் அலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முக்கிய சில பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

அவையாவன:-

01) தேசிய ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்புதலின் படி நாட்டின் சனத் தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு முழுமையான தடுப்பூசி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுதல்.

02) தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனை குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் இருந்து மூன்றாவது பூஸ்டர் டோஸை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.

03) சுகாதார வழிகாட்டுதல்களின்படி புதிய வாழ்க்கை முறைக்கு மக்களை உள்வாங்கல்.

04) தடுப்பூசி போடப்பட்ட போதிலும் வைரஸால் பாதிக்கப்பட்டு நேர்மறை அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண இலவசமாக வழங்கக்கூடிய, எளிமையான ஒரு கொரோனா பரிசோதனை முறையொன்றை அறிமுகம் செய்தல்.

05) சமூகத்தில் பரவி வரும் கொரோனாக் கொத்தணிகளை அடையாளம் காண, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக எழுமாறாக மாதிரிப் பரிசோதனைகளை முன்னெடுத்தல்.

06) விஞ்ஞான மற்றும் சீரான முறையில் மரபணு சோதனையை நடத்துவதன் மூலம் சாத்தியமான புதிய திரிபுகளை அடையாளம் கண்டு, ஆரம்பத்தில் இருந்தே சமூகத்தில் பரவுவதை தடுக்க உத்திகளை செயல்படுத்தல்.