கொலை சூழ்ச்சியில் அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தொடர்புபட்டிருக்கவில்லை – சரத் வீரசேகர

Sarath Weerasekera 1
Sarath Weerasekera 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கொலை சூழ்ச்சியில் அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தொடர்புபட்டிருக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விசேட கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால், 2018 ஆம் ஆண்டில் நாமல் குமார என்பவரால் வெளியிட்ட கொலைச் சூழ்ச்சிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்ன என்றும் இதனுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா? என்றும் நளீன் பண்டார கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

2018 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் குறித்து அப்போது பயங்கரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளராக இருந்த நாலக சில்வா கைது செய்யப்பட்டதுடன், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் இருப்பதாக நாமல் குமார என்பவர் 2018 செப்டம்பர் 18 ஆம் திகதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டு வந்து அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்ட ஆலோசனைகளை கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கொலைச்சூழ்ச்சியில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்புபட்டுள்ளனவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல்கட்சிகளோ அரசியல்வாதிகளோ அதில் தொடர்புபடவில்லை என்றார்.