கொரோனாவைப் பயன்படுத்தி எதிரணி அசிங்கமான அரசியல்: அமைச்சர் ரோஹித குற்றச்சாட்டு

rogitha
rogitha

நாட்டில் 5 ஆவது கொரோனா அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் பிரதான எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் கொரோனா மரணங்களே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும்.

என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல திருத்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர், மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் திரிபடைந்து வருகின்றது. இது மீண்டும் இலங்கையைத் தாக்குமானால் தடுப்பூசியால் கூட கட்டுப்படுத்த முடியாது. எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தினமும் எச்சரிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சி கொரோனாவின் 5 ஆவது அலை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் அதற்கு அழைப்பும் விடுக்கின்றது. இது அசிங்கமான அரசியல்.

ஒரு பக்கம்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம். ஆடிப்பாடி வெடிகள் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இன்னொரு புறம் ஆசிரியர்கள் போராட்டம். இவற்றுக்கு  எதிர்க்கட்சியே  அனுசரணை.

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜட் கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் முடிந்தளவுக்கு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதே இவர்களின் நோக்கம்.

எதிர்க்கட்சி கொரோனாவைப் பயன்படுத்தி அசிங்கமான அரசியல் செய்கின்றது. கொரோனா மரணங்களே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும். அதனால்தான் கொரோனாவின் 5 ஆவது அலைக்கு அழைப்பு விடுக்கின்றது. எனவே, நாட்டில் 5 ஆவது கொரோனா அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் பிரதான எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.