சமையல் எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே வெடிப்புக்கு காரணம்!

gas 2
gas 2

சமையல் எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது என எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தும் போது உரிய நிறுவனங்களிடம் அனுமதி பெறவில்லை. சமையல் எரிவாயுடனான வெடிப்பு சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமலிருப்பதற்கு 25 இற்கும் அதிகமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

இலங்கையில் எரிவாயு இறக்குமதி தொடக்கம் சிலிண்டர் விநியோகம் வரை முறையான ஒழுங்குப்படுத்தல் இல்லாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக உள்ளது என்றும் அவர் கூறினார். 

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.