நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் – ஐ.ம.ச, ஜே.வி.பி வலியுறுத்தல்

NW02 scaled 3
NW02 scaled 3

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அரசாங்கமும், ஜனாதிபதியும் ‘பெயில்’ என்பதை மறுக்க முடியாது. ஆகவே இனியும் இவர்களினால் ஆட்சியை கொண்டு நடத்தவே முடியாது. 

எனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜக நிலைமைகளில் அரசாங்கத்தை மாற்றுவதே ஒரே தீர்வாகும் என பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இது குறித்து கூறுகையில், 

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டை முழுமையாக நாசமாக்கிவிட்டது. எம்மை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள் எமது அரசாங்கத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அவ்வாறே முன்னெடுத்து சென்றிருந்தால் நாடு இன்று சுமூகமான நிலையில் சென்றிருக்கும். 

புதிய வேலைத்திட்டங்களை உருவாக்குவதாகவும், தூரநோக்கு திட்டத்தை உருவாக்குவதாகவும் கூறி சகல மக்களையும் கஷ்டத்தில் தள்ளியுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் நாட்டில் வறுமை நிலையொன்று ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது. 

எமது ஆட்சியில் விலைவாசி உயரவில்லை, உர தட்டுப்பாடு ஏற்படவில்லை, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை, வீடுகளில் எரிவாயு வெடிக்கவும் இல்லை, அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. 

ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற தேவையில் இறுதி நேரத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை வைத்து இனவாத அரசியலை முன்னெடுத்ததன் விளைவாக இன்று நாட்டு மக்கள் துன்பப்படுகின்றனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அரசாங்கமும், ஜனாதிபதியும் ‘பெயில்’ என்பதை மறுக்க முடியாது. ஆகவே இனியும் இவர்களினால் ஆட்சியை கொண்டு நகர்த்தவே முடியாது. 

எனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். தேர்தலுக்கு செல்வோம் என்பதையே நாமும் அரசாங்கதிடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று மிக மோசமான நிலையொன்று காணப்படுகின்றது. அராஜக ஆட்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது. கடன் செலுத்த முடியாத நிலைக்கு நாடு வீழ்ச்சி கண்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஆட்சியை கைவிட்டுள்ள நிலையில்  நாளுக்கு நாள் அராஜகமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் இடம்பெறக்கூடாத செயற்பாடாகும். 

எனவே இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் மிக மோசமான சமூக பிரச்சினை ஒன்று ஏற்படும். 20 ஆம் திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் நாடாளுமன்றத்தை கலைக்கவும் பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியும் என்ற வலியுறுத்த முடியும்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு மத்தியில் இதனை முன்னெடுக்க முடியும். நாமும் அதனை வலியுறுத்த தயாராக உள்ளோம் என்றார்.