ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று இந்த மோசமான நெருக்கடியை சந்தித்து இருகின்றது: கஜேந்திரன்

kajenthiran mp
kajenthiran mp

அரசாங்கத்தின் ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று இந்த மோசமான நெருக்கடியை சந்தித்து இருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற போர்ரைவயில் ஒரு இனவழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட அரசாங்கம் இந்த 30 வருடங்களில் மட்டுமல்ல 74 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை சொல்லித் தான் சிங்கள மக்கள் மத்தியில் தமது அரசியலை செய்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நாட்டை முன்னேற்றுவசதற்கான தெளிவான திட்டங்களோ, கொள்கைகளோ கிடையாது.

அவர்கள் இனவாத சிந்தனைக்குள் மூழ்கியிருக்கும் வரை நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. இவர்களுடைய ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று இந்த மோசமான நெருக்கடியை சந்தித்து இருகின்றது.

எங்களைப் பொறுத்தவரையில், இன்றைய எரிபொருள் நெருக்கடியாக இருக்கலாம் அல்லது ஏனைய பொருளாதார நெருக்கடிகளாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் இவர்களது தவறான முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இவர்கள் தமது போக்கில் ஒரு சிந்தனை மாற்றத்தை கொண்டு வர முடியாது போனால் இந்த நாடு இன்னும் மோசமான நிலையை நோக்கியே செல்லும்.

தமிழர்களின் உரிமையை அங்கீகரித்து அவர்களது சமத்துவத்தை ஏற்றுக் கொண்டு ஒரு புதிய பாதையில் புதிய தேசத்தை கட்டியெழுப்ப சிந்திக்கவில்லையாயின் இந்த நாட்டை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்தார்.