வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடினால் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்- ஜேசுதாசன்

IMG 20211011 WA0003
IMG 20211011 WA0003

இலங்கை அரசாங்கம் வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்பதனால் வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும். அது தவிர மீனவர்களுக்கிடையே கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது என மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் தேசிய இணைப்பாளரும், வடகிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளருமான அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய மீனவர்களுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இந்தியா மீனவர்களுடைய பிரச்சினை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதிலே பல சிக்கல்கள் இருக்கிறதை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். 

குறிப்பாக இரண்டு மீனவர்கள் இறந்ததற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று கடந்த 23ஆம் திகதி கொழும்பிலே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் இணைந்து எல்லா மாவட்ட மீனவர்களும் அதே நேரம் வடக்கிற்கு அப்பால் கிழக்கு, மேல் மாகாணம், தென் மாகாணம், நாட்டின் மத்திய பகுதிகளில் இருந்தும் கூட இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.

 இந்த போராட்டத்தின் போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், ஜனாதிபதி செயலகத்தினுடைய தொடர்பாடல் பிரிவின் இரண்டு செயலாளரையும் சந்திக்க கூடியதாக இருந்தது.  அந்த சந்திப்பின் ஊடாக நநாடாளுமன்றத்திற்கு அதாவது அமைச்சரவைக்கு ஒரு பத்திரம் முன்வைக்கப்பட்டிருக்கிறதாக இந்திய இழுவை பிரச்சினைகளுக்கு இந்திய அரசாங்கம் தலையிட்டு அதற்கான தீர்வை வழங்குவதற்கான முயற்சிகள் எடுத்தல், சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை முழுமையாக தடுத்தல், இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல், 2017 இலக்கம் 11 சட்டத்தையும், 2018 இலக்கம் 1 சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.

 இது ஒரு முன்னேற்றகரமான நிலையிலே இருக்கிறது. அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட இந்த நான்கு கோரிக்கைகளையும் அடிப்படையாக கொண்டு செயற்பட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என நாங்கள் பார்க்கிறோம். கடற்படையினர், இந்திய படகுகளை கொஞ்சம் அதிகமாக கைது செய்வதையும் பார்க்கின்றோம். 
இது ஒரு முன்னேற்றகரமாக இருக்கின்ற வேளையிலே நாங்கள் அரசாங்கத்துக்கு கூறுகின்றோம் ஒரு நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டுமென. இவ்வாறான இந்த நிரந்தரமான தீர்வை கேட்டு போராடி கொண்டிருக்கிற வேளையிலே இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான, கலந்துரையாடல், அநாவசியமானது.

மீனவர்களுக்கிடையே தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை கிடையாது. இது அரச, ராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. ஆகவே நாங்கள் கூறுகின்றோம் மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் அரசு நடத்தக்கூடாது. ராஜதந்திர ரீதியாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். 

ஆனால் ஒரு விடயத்தை நாங்கள் கோருகின்றோம். இந்திய, தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையிலே ஒரு கலந்துரையாடல் செய்வது நல்லது. அதுவும் இலங்கையில் வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு விளங்கப்படுத்துவதற்காக பல பொய்யான கூற்றுக்கள் சொல்லப்பட்டு பிரச்சினைகள் சித்தரிக்கப்படுகிறது. 

ஆகவே வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு சொல்லுவதற்கான ஒரு சந்திப்பு இலங்கை மீனவர்களுக்கும், இந்திய தமிழ்நாட்டினுடைய அரசாங்கத்திற்கும் இடையிலே முதலமைச்சரோடு கலந்துரையாடலை முன்னெடுப்பது நல்லது. 

அது தவிர மீனவர்களோடு கலந்துரையாடல் செய்வது அநாவசியமானது. அது பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வழி அல்ல. பிரச்சினையை தள்ளிப் போடுவதற்கான ஒரு வழியாக இருக்கும். ஆகவே இலங்கை அரசாங்கம் வடபகுதி மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்வது நல்லது. அப்படி இல்லாவிட்டாலும் ராஜதந்திர ரீதியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என மேலும் தெரிவித்தார்.