கோட்டா – மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஒன்று சேர அழைப்பு!

Mahinda Gota vaccin
Mahinda Gota vaccin

கோட்டா – மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஒன்று சேருமாறு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிசக் கட்சி வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (30) அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை பற்றி அனைத்து மக்களும் அறிந்தவைகளே. ஏனெனில் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வரிசையிலோ அல்லது பொருட்கள் கிடைக்காமையினால் அவதிப்படக்கூடிய சூழலினை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாட்டினுடைய இந்த நிலமை எவ்வாறு உருவெடுத்தது என்பதை இலங்கை மக்களாகிய நாங்கள் அனைவரும் உணர வேண்டியவர்களாக இருந்து வருகின்றோம். 

பொதுஜன பெரமுன ஆட்சி அமைப்பதற்கு முன்பு அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் கோட்டா, மகிந்தா ஆட்சிக்கு வந்தால் 1500/- ரூபா யூரியா மானியமாக தரப்படும் எனவும் பத்து இலட்சம் அரச நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அபிவிருத்தியில் நாடு கொடி கட்டிப் பறக்கும் என்றும் கூறினார்கள். இன்று இலங்கையில் உழைக்கும் எண்பது வீதமான மக்கள் பட்டினிச்சாவுக்குள் செல்லக்கூடிய அவல நிலைக்குள் கொண்டு வந்து நிறுத்திய ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக அதிகரித்து வரும் விலை அதிகரிப்பு பொருட்கள் தட்டுப்பாடு மேலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல், பதுக்கல், பணவீக்கம், டொலர் தட்டுப்பாடு என்பன நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையும், தேசிய உற்பத்தி பொருளாதாரத்தை நாசமடைய செய்தமையே காரணமாக காணப்படுகின்றது. எனவே இதனைக் கருத்திற்கொண்டும் கோத்தா, மகிந்தாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகவும் 31ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு ஒன்றை நடாத்துவதற்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

எனவே அரசியல் வேறுபாடுகளை கடந்தும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும் மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும் மக்கள் பேராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கும் இணையுமாறு கட்சி அழைத்து நிற்கின்றது