பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியிருக்கும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் எழுச்சி!

1648744584 1648744273 vi L
1648744584 1648744273 vi L

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதுபோல் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்ட கோட்டாபய ராஜபக்ச என்று புகழ்ந்த பெளத்த, சிங்கள மக்கள் இப்போது அந்தக் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டத்தைக் கட்சிகள், தரப்புகள் கடந்து ஆரம்பித்திருக்கின்றனர்.

நேற்று மாலை முதல் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுச் சுற்றாடலில் திரண்ட இளைஞர்கள் – யுவதிகள் கூட்டம் அதைத்தான் எடுத்துக்காட்டி நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியிருக்கின்றது.

‘தடி எடுத்தவன் தடியால் அழிவான்‘ என்பார்கள். பெளத்த, சிங்களப் பேரினவாத வெறியைக் கிளப்பி, அந்த வெறி எழுச்சியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ச அதேபோன்ற மக்கள் எழுச்சியை – எதிர் புரட்சியை – வெறித்தனமான மக்கள் கோபத்தை இப்போது எதிர்கொள்ளும் துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் மூலம் பெற்ற ஆணை நேரத்துடன் காலாவதியாகி விட்டது என்பது கண்கூடு. ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற மக்கள் எழுச்சி ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

சிவில் நிர்வாக அதிகாரிகளின் இடங்களுக்குப் படையினரையும், ஓய்வுபெற்ற படை அதிகாரிகளையும் நியமித்து, நாட்டின் உயர்மட்ட சிவில் நிர்வாகத்துறையை இராணுவமயப்படுத்தியிருக்கும் – முன்னாள் இராணுவ எதேச்சதிகாரியான ஒருவருக்கு எதிராக மக்கள் புரட்சி அல்லது எழுச்சி என்பது விபரீதமான விளைவுகளைத் தரவல்லது.

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து முடிவெடுக்காமல் – கும்பல் மனப்பாங்கில் தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கவனமாகக் கையாள வேண்டிய போராட்டம் இது.

நாளைமறுதினம் நாடு முழுவதிலும் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் அதற்கிடையில் இளைஞர், யுவதிகள் தாமாக ஒன்றுதிரண்டு ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி இந்தப் போராட்டத்தை அதிரடியாக நேற்று மாலை ஆரம்பத்திருக்கின்றார்கள்.

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கான வீழ்ச்சி, இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படுகின்றது எனத் தோன்றுகின்றது.

மக்கள் எழுச்சியையும் பதற்றத்தில் குழப்பியடித்து, களேபரங்களை ஆளும் தரப்பு உண்டு பண்ணுமானால், ஆட்சியின் வீழ்ச்சி இன்னும் சில மடங்கு வேகத்தில் சரிவுடன் ஆரம்பிக்கும்.