முழு அமைச்சர்களும் கூண்டோடு விலகல்! புதிய அமைச்சரவை தொடர்பில் கோட்டா – மஹிந்த இன்று பேச்சு

Mahinda Gota vaccin
Mahinda Gota vaccin

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது மேற்படி முடிவு எடுக்கப்பட்டு, இராஜிநாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிரான மக்களின் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அமைச்சர்கள் அனைவரும் இராஜிநாமாச் செய்யத் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய பிரதமரைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் பதவி துறக்கும் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி அமைச்சர்களின் இராஜிநாமாக் கடிதங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (04) சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் பதவி விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்களும் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இராஜிநாமாக் கடிதங்களை ஜனாதிபதி ஏற்ற பின்னர் புதிய அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். அந்த அமைச்சரவை இடைக்கால சர்வகட்சி அரசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்சவே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று தற்போது பதவி விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.