மெய்நிகர் முறையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு ஜீவன் – சுமந்திரன் வலியுறுத்து!

எம்.ஏ
எம்.ஏ

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டியதொரு விடயமாகும் என ருவிட்டர் பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவேண்டுமென ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று, இன்றைய தினம் உரிய நேரத்தில், இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,ருவிட்டர் பதிவொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டமும் இரத்துச் செய்யப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி சபாநாயகரினால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என சபாநாயகர் முன்னதாக தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவழி கட்சித்தலைவர் கூட்டத்தை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.