ரணில் பிரதமராக பதவி ஏற்றமை ஜனநாயக விதிமுறைக்கும் முரணானது

kajenthirakumar 1
kajenthirakumar 1

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க அனுபவமிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அனுபவமிக்கவர் என்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிரான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்களுடன் இணைந்து ஆட்சியை மாற்றியிருப்பதாக நாடகமாடுவதை ஏற்கமுடியாது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு முதல் நாள் என்னை சந்தித்து எமது கட்சியின் ஆதரவை கோரினார். ஆனால் நான் அதனை மறுத்து விட்டேன்.ரணிலின் கெட்டித்தனத்தை அரசாங்கம் பாவிக்க விரும்பினால் அதற்கென ஒரு முறை இருக்கின்றது.

இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு கட்சிகள் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன.

முதுகெலும்பில்லாத இந்திய அரசின் அடிவருடிகளான சிலதமிழ் கட்சிகள் விழுந்து விழுந்து ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்று மக்களுக்கு உண்மையைச் சொல்லாது ஜனாதிபதி கோட்டாபயவை எதிர்க்கின்றோம் என பொய் கூறி மலசலம் கூடம் செல்வதற்கு கூட ஐனாதிபதியிடம் கேட்க வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது .

இந்திய அரசின் எடுபிடிகளாக செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. அதேபோல ஒரு தரப்பு எங்களை தோற்கடிக்க தாங்கள் ஒரு தேசியவாதி என நடிப்பவர் அமைச்சர் பதவிகளையும் ஏற்பதாக அறிவித்திருக்கின்றார்.

சுமந்திரன் கொஞ்சம் நாசூக்காக அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என்றார். ஆனால் நாடாளுமன்றில் உள்ள குழுவொன்றின் தவிசாளர் பதவியினை ஏற்பதாக கூறியிருந்தார் ஆனால் அதையும் தாண்டி பெரும் தேசியவாதியாக தன்னை காட்டுகின்ற விக்னேஸ்வரன் ஐயா தான் அமைச்சர் பதவி ஏற்க தயாராக உள்ளேன் என்கிறார்.

எனவே தமிழ் மக்கள் ஒன்றினை விளங்கிக் கொள்ள வேண்டும் . இனப்படுகொலைகளை மேற்கொண்ட ராஜபக்ஷ தன்னுடைய குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்கு மேற்கிற்கும் இந்தியாவுக்கும் சரணடைந்து இருக்கின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை வைத்து மேற்கும் இந்தியாவும் விரும்பும் வகையிலே தமிழ் அரசியல் கட்சிகள் இனப்படுகொலையாளியின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கப் போகின்றார்கள்.

கடந்த முறை கூட இவ்வாறு காப்பாற்றினர். அதேபோல இந்த முறை கோட்டாபய முதுகெலும்பில்லாத தமிழ் கட்சியுடன் இணைந்து மீண்டும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட நீதியை கோரி போராடுகின்ற தமிழ் மக்களுக்கு முகத்தில் அறையும் வகையில் அந்த தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்ற தமிழ் கட்சிகள் இன்றைக்கும் செயற்படுகின்றன. முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானது என்றார்.