ரணிலுடன் பேச்சு நடத்துவதற்கு நிபந்தனை விதிக்கும் கஜேந்திரகுமார்!

kajenthirakumar
kajenthirakumar

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் அவசரகாலச் சட்டம் ரத்துச்செய்யப்படும் வரை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை எதிர்காலத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுநாள் 10 ஆம் திகதியன்று சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்க தமக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் பங்கேற்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுடன் ஜனாதிபதி அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.