இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம்

Monkeypoxarm c5d3d08a ef20 4ac0 9f72 6e6d58bf71db prv
Monkeypoxarm c5d3d08a ef20 4ac0 9f72 6e6d58bf71db prv

இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு நோயை கண்டறிந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று நிபுணத்துவப் பிரிவின் ஆலோசகர், வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2 ஆம் திகதி காய்ச்சல் மற்றும் தோல் கொப்புளங்களுடன் 20 வயதான ஆண் ஒருவர் தேசிய பாலியல் நோய் தொற்று பிரிவுக்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்தார்.

கடந்த முதலாம் திகதி துபாயிலிருந்து திரும்பிய அவருக்கு குரங்கு காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கடந்த 2 ஆம் திகதி மதியம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு வைரஸ் தொற்று நிபுணத்துவப் பிரிவில் ஒரே இரவில் குரங்கு காய்ச்சலுக்கான நிகழ்நேர பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, குறித்த நோயாளிக்கு நேற்று (3) குரங்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் நிகழ்நேர பிசிஆர் பரிசோதனையை நிறுவியதில் இருந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் ஆறு சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் மாதிரிகளை குரங்கு காய்ச்சலுக்காக பரிசோதித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏழாவது சந்தேகத்திற்குரிய நபரின் மாதிரி ஊடாக, ஆய்வக பரிசோதனை மூலம் இலங்கையின் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.