20ஆவது திருத்தச்சட்ட மூலத்தை தோல்வியடைய செய்வதற்காக கடுமையாக முயற்சிப்போம்- என்கிறது சஜித் அணி

1565091858 ranjith madduma bandara 5
1565091858 ranjith madduma bandara 5

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூல உருவாக்கத்திற்கு எதிராக, வடக்கு, தென்னிலங்கை மற்றும் மலையகம் என நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின், 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் சமூக மட்டத்தில் பல்வேறு கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலதரப்பட்ட தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளும் தற்போது இந்த விடயம் தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராய்ந்து வருகின்ற நிலையில், அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியமைப்பின் 20 வது திருத்தச்சட்ட மூலத்தை தோல்வியடைய செய்வதற்காக நாடாளுமன்ற செயற்பாட்டுக்குள் மேற்கொள்ள கூடிய அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்கும், அதனை பலப்படுத்துவதற்கும் எந்தவொரு தரப்புடனும் நிபந்தனையின்றி செயற்பட தயார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன், 2015 ஆம் பெற்றுக்கொண்ட வெற்றியை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 20 ஆம் திருத்தச் சட்டமூல உருவாக்கத்திற்கு எதிராக வடக்கு, தென்னிலங்கை மற்றும் மலையக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, குறித்த அனைத்து தரப்புகளுடனும், பேச்சவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் விரைவில் கூடி, ஜனநாயக ரீதியான செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராய உள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தின்போது, இதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.