நாம் சுட்டபோது பொன்சேகா எங்கே போனார்?: செல்வம் அடைக்கலநாதன்!

unnamed 5
unnamed 5

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இனியும் வீடு மீன் சைக்கிள் எனப் பிரிந்து நிற்காது ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் எனவும் இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றிணையாவிட்டால் தந்தை செல்வா சொன்னது போன்ற நிலைமையே ஏற்படுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு யாழ் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அலையொன்று தென்னிலங்கையில் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் வாடகை வீட்டுக்காரர்கள் என்றும் இனவாத ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புத்த பிக்குகள், பிரதமர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் உட்பட அனைத்து சிங்கள தரப்பும் ஒற்றுமையாக நின்று தமிழர்களிற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

அதிலும் தமிழர்களின் மண்ணையும் மொழியையும் பேசியவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் கூறுவதனூடாக அவ்வாறு யாரும் கூறினால் உங்களுக்கும் அதுவே நடக்குமென்ற பாணியில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு தென்னிலங்கையில் மிகப் பெரியளவில் இனவாத ரீதியான பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்று சொன்ன கருத்திற்கு எதிராகவே தற்போது இந்த இனவாதப் பிரச்சாரங்களை அவர்கள் போட்டி போட்டு முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்கள தரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர்.

சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை. தமிழர் தரப்புக்களிடத்தே அந்த ஒற்றுமை என்பது கானல் நீராகவே உள்ளது. தென்னிலங்கை இனவாத அலையை எதிர்ப்பவர்கள் சொற்பமாகவே உள்ளனர். ஆக தமிழ் தேசம் எங்கே போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

எமது தொன்மையை பேசியதற்காக, நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றார் சரத் பொன்சேகா. இராணுவத்தில் என்ன சுட்டார்கள் என்பது தெரியவில்லை. இப்பொழுது வாய் திறந்து கத்துகிறார். அப்போது நாம் சுடுகின்ற போது இவர் எங்கேயிருந்தார்.

தமிழர்கள் பூர்வீக்கக் குடிகள் என்றதற்கு எதிர்ப்பு வந்தாலும் நாம் எமது மண்ணையும் மொழியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எமது ஒற்றுமையே தற்போது அவசியமானது. ஏனெனில் எங்களுக்கு எதிராக தெற்கில் அவர்கள் எவ்வாறு ஒன்று திரண்டு இருக்கின்றனர் என்பதை தெளிவாகப் பார்க்க வேண்டும். ஆகையினால் எங்களுக்குள்ளும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு நான் வந்திருந்த போது ஒரு செய்தியொன்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன். அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளாக இருக்கின்ற வீடு, மீன், சைக்கில்ள் கட்சிகளின் இளைஞரணியினர் ஒருமித்து ஒரு முடிவொன்றை எடுத்துள்ளனர். தியாக தீபம் தீலீபன் நிகழ்விற்காக ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவதாக அவர்கள் எடுத்துள்ள அந்தத் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
இளைஞர்களின் ஒற்றுமையான அந்தச் செயற்பாட்டிற்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். இளைஞர்கள் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்பட முன்வந்துள்ளது போன்று கட்சிகளும் அதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அதனைவிடுத்து எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எமது வாழ்வு கேள்விக்குறி.

ஆகவே எங்கள் மொழி கலை கலாச்சாரம் மண் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுட்டு செயற்பட வேண்டியது அவசியம். குறிப்பாக எங்களுக்குள் இனியும் வீடு மீன் சைக்கில் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனைவிடுத்து உதட்டளவில் தேசியம் பேசுவதில் பயனில்லை. மேலும் உதட்டளவில் ஒற்றுமைய குறித்துப் பேசுவதையும் நிறுத்த வேண்டும். மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட வேண்டும்.
அவ்வாறானதொரு ஒற்றுமைக்காகவே நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வருகின்றோம்.

இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்த போது இருந்த கட்சிகள் எல்லாம் அதிலிருந்த வெளியேறியிருக்கின்ற போதும் நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பிலேயே இருந்து வருகின்றோம். ஆகவே எங்களது கட்சியிலும் சரி கூட்டமைப்பிலும் சரி எம்முடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

குறிப்பாக நாடாளுமன்றில் இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒருமித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்த குரல் எழுப்ப வேண்டும். இதில் நாடர்ளுமன்றில் அண்மையில் விக்கினேஸ்வரன் ஐயா தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கையின் ஆளும் தரப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போது கூட அந்த இடத்தில் நாங்கள் தமிழர்களாக குரல் எழுப்பியிருந்தோம்.


அவ்வாறு எங்களுக்கு எதிராக எழுப்பப்டுகின்ற இனவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற அத்தகைய ஒன்றிணைவு இன்றியமையாதது. அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது. நாங்கள் ஓரணியில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியம் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அனைவரும் முன் வர வேண்டும்.

இதனைவிடுத்து தேசியம் இனம் மண் என பேசி கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படக் கூடாது. எங்கள் தேசத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழ் தரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அது உதட்டளவில் இல்லாமல் மனப்பூர்வமாக அமைய வேண்டும். இன்றைய நிலையில் இந்த ஒற்றுமைய ஏற்படாது விட்டால் தந்தை செல்வா சொன்னது போன்று தமிழர்களை கடவுளாளும் காப்பாற்ற முடியாது.

ஆகையினால் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் அழைப்பது மாத்திரமல்லாமல் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்தும் உழைப்போம். அவ்வாறு அத்தகையதொரு ஒற்றுமையை நாங்கள் உருவாக்குகிற பொழுது அதற்கு யார் இடைஞ்சலாகவோ அல்லது வரவில்லை என்றாலோ அதனை நாங்கள் தெளிவாக அடையாளப்படுத்திக் கூறுவோம். அவர்கள் யார் என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு உங்களது முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதே வேளை இந்த அரசாங்கம் 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளது. ஆதனை ஆட்சியாளர்கள் தங்களது குடும்ப நன்மைக்காகவே கொண்டு வருவதற்கு முயல்கின்றனர். இதனை நாங்கள் சாதாரணமாகக் கடந்து சென்று விட முடியாது.

அதே போலவே அபிவிருத்தி என்ற விடயத்திலும் நாங்கள் சாதாரணமாக எதனையும் கடந்து போக முடியாது. அபிவிருத்தி செய்வோம் அதுவே தேவை என்ற அடிப்படையில் பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் நியாயமான ஒரு தீர்வையே கோருகின்றோம். இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை கூட மாற்றுகின்ற செயற்பாடகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். அதற்கும் இடங்கொடுக்க முடியாது என்றார்.