20 நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்; எச்சரிக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் இணைப்பேச்சாளர்

52

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களின்மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் விடங்கள் வருமாறு:

இலங்கையில் ஏற்படவிருக்கின்ற எதேச்சாதிகார ஆட்சியினுடைய முதற்படியாக அரசியல் சாசனத்துக்கான 20 ஆவது திருத்தத்தை கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்றது. ஏற்கனவே 20 ஆவது திருத்தமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த 20 ஆவது திருத்தம் தொடர்பாக பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பமாகி இருக்கின்றது.

முன்னர் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 ஆவதுதிருத்தச் சட்டமானது ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபாலசிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஷ போன்றோரின் ஆசீர்வாதத்துடனேயே கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக ஜனாதிபதிக்கு உரித்தான சில அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட்டு அதனூடாக சுதந்திரமான ஆணைக்குழுக்களை நியமிக்கவும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் தனிநபர் ஒருவரிடம் குவிந்திருந்த அதிகாரங்களை குறைத்து அதனை பாராளுமன்றத்துக்கு கையளித்து அதனூடாக ஒரு வெளிப்படையான நல்லாட்சி ஒன்றை உருவாக்குவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அவ்வாறான திருத்தமானது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கும் சட்டவாக்க சபையின் தலைவரான பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது. அந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகளை ஆராய்வதை விடுத்து 19 ஆவது திருத்தத்தை இல்லாது செய்து மீண்டும் பழைய நிலைக்குப் போவதென்பது ஒரு சர்வாதிகார எதேச்சதிகார ஆட்சியொன்றை நிறுவுவதற்கே வழி வகுக்கும்.

கொண்டுவரப்படவுள்ள 20 ஆவதுதிருத்தம் என்பது ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கி பிரதமருடைய ஒப்புதல் இல்லாமலேயே அமைச்சர்களை நியமிக்கவும், மாற்றவுமான அதிகாரங்களைக் கொண்டிருப்பதுடன் முக்கியமான ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் மற்றும் உயர் பதவிகள் போன்றவற்றுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கக் கூடிய வகையில் இந்த 20ஆவது திருத்தம் வழிவகுப்பதானது ஊழல், மோசடி மற்றும் சர்வதிகார ஆட்சியை உருவாக்குவதற்கே துணைநிற்கும்.

19 ஆவது திருத்தம் இருந்தபொழுது திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்பதவிகள் போன்றவற்றுக்கான நியமனங்களை செய்வதற்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன சபை இருந்தது. ஆனால் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இவை அகற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்குவது மாத்திரமல்லாமல் பாராளுமன்றக் குழு ஒன்றினுடைய ஒப்புதல் பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலையை தோற்றிவிப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகமே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.

இது மாத்திரமல்லாமல் ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக ஒட்டுமொத்த குடும்பத்தைச் சார்ந்த பலபேர் இருக்கையில் அதில் அமெரிக்க இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்களும் இணைக்கப்படவேண்டும் என்பதற்காக இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் பாராளுமன்ற உறுப்பினராகலாம் அமைச்சராகலாம் என்ற 20 ஆவது திருத்தமானது ஒருகுடும்ப தேவைக்காக கொண்டுவரப்பட்டதே தவிர இலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு திருத்த சட்டமூலம் அல்ல. இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்;, அமைச்சராக இருக்கவேண்டும். அதன் பின்னர் இறுதி காலத்தில் அமெரிக்காவில் சீவிக்கவேண்டும், அதற்கு அவர்களின் இரட்டைக் குடியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டம் அதற்கு இடைஞ்சலாக இருப்பதால் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர குடும்ப ஆட்சியினர் முயற்சிப்பதும் அதனை கற்ற நாடாளுமன்ற பிரதிநிதிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க இருப்பதும் வேடிக்கைக்குரியதாகவும் சிரிப்புக்குரியாதாகவும் இருக்கின்றது.

இதனைப் போலவே 35 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலையைமாற்றி 30 வயதிற்கு மேற்பட்ட யாரும் போட்டியிடலாம் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட உள்ளது. இவை அனைத்துமே குடும்ப நலன்களை மையப்படுத்தியதே தவிர இந்த நாட்டு மக்களின் நலன்களை மையப்படுத்தியதல்ல.

ஏற்கனவே 30 இற்குமேற்பட்ட திணைக்கள தலைவர்களாகவும் சில அமைச்சுக்களினுடைய செயலாளர்களாகவும் பாதுகாப்புப்படைத் தளபதிகளே நியமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்பொழுது தங்களது குடும்பத்திற்கு ஏற்ற வகையில் எந்தவிதமான வெட்கதுக்கமும் இன்றி அரசியல் சாசன திருத்தத்தையும் கொண்டுவருகின்றார்கள். இவை எல்லாம் ஒருங்கிணைந்து, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரு குடும்பத்துக்குள் அடக்கிய எதேச்சதிகார ஆட்சிக்கு ஒரு அடித்தளத்தை இடுவதாகவே தோன்றுகின்றது.

ஜனநாயகத்தில், வெளிப்படைத் தன்மையில், நல்லாட்சியில் அக்கறைகொண்ட சிங்கள மக்கள் விழித்தெழப் போகின்றார்களா அல்லது ஓர் எதேச்சதிகார ஆட்சிக்கு வழிசமைக்கப் போகின்றார்களா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும். தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறுபட்ட தமிழர் பிரதிநிதிகளும் இந்த ஜனநாயக விரோத அரசியல் சாசனதிருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வருவார்களா அல்லது எதேச்சதிகாரத்துடன் இணைந்து பயணிப்பார்களா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

கோத்தபாய அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றியமைத்து இருபதாவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட மக்களாணை தங்களுக்குத் தரப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அந்த இருபதாவது திருத்தமானது, குடும்ப ஆட்சியையோ, அல்லது ஒரு எதேச்சாதிகார ஆட்சியையோ நிறுவுவதற்கானது என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த இருபதாவது திருத்தம் என்பது முழுக்க முழுக்க மக்கள் விரோத திருத்தமாகவே அமைந்திருக்கிறது. இதனை நாட்டின் சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தாங்கள் புள்ளடியிட்டு தெரிவு செய்த தமது பிரதிநிதிகள் தமது நலன்சார்ந்து செயற்படப்போகிறார்களா அல்லது தாங்கள் அளித்த வாக்கின் புள்ளடி மை மறைவதற்குள்ளாகவே தமது பிரதிநிதிகள் குறுகியகால அரசியல் சுயலாபத்திற்காக தங்களைக் காலம் முழுவதும் அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆதரவளிக்கப் போகிறார்களா என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

தற்பொழுது இந்த அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எதிர்காலத்தில் தமது தவறுகளுக்காக வருந்தவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.