அரச வங்கி தலைவர்களுக்கு பிரதமர் ஆலோசனை

n6
n6

பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கின்ற மக்களை அதிலிருந்து மீட்பதற்காக கடன் வழங்கும் போது நெகிழ்வுப்போக்கான கொள்கையொன்றை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று அரச வங்கிகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நிதியமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

கடன் செலுத்துவதற்கு முடியாதுள்ள மற்றும் புதிதாகக் கடன் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களை வங்கிகளில் தேவையற்ற விதத்தில் கஷ்டப்படுத்த வேண்டாமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை கடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளைப் பரிசீலனை செய்யும் பணிகளின் போது மக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகள் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இங்கு சுட்டிக்காட்டினார்.

கடன் செலுத்தாத நபரின் பிணையாளராக இருப்பதால் கடனொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அந் நபர் தகுதி இழப்பது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக புதிய நிவாரண முறையொன்றை கடைப் பிடிக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார் .

கடந்த அரசு சமுர்த்தி பெற்றுக்கொடுக்கும் போது கட்சியினருக்கு விசேட கவனம் செலுத்தி அந்த உதவிகளை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஆராயுமாறும் அரசியல் பேதமின்றி குறைந்த வருமானமுடைய அனைத்துக் குடும்பங்களுக்கும் சமுர்த்தி பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கீழான ‘சபிரி கமக்’ என்ற சிறந்த கிராம திட்டத்துக்காக 28 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளது. அதற்கமைய நாட்டிலுள்ள 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 02 மில்லியன் ரூபா வீதம் பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமரின் ஆலோசனையின் கீழ் கிராம பிரஜைகள்குழு மூலம் கீழ் குறிப்பிடப்பட்ட பின்வரும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கிராமிய பாதைகள், படிக்கட்டுக்கள், சிறிய பாலங்கள, வடிகான்கள், விவசாய உற்பத்திகளுக்கான தேவையான களஞ்சிய வசதிகள், கிராமிய மட்டத்திலான பொருளாதார நிலையங்கள், வாராந்த சந்தைகள், சந்தைகள் அமைந்துள்ள இடங்களை அபிவிருத்தி செய்தல், இந்தத் திட்டங்களில் சிலவாகும்.

குடிநீர் உற்பத்தித் திட்டங்கள், கிராம சுகாதார நிலையங்களை நவீனப்படுத்தல், முன்னேற்றுதல், பாடசாலைகளு்ககு மின்சாரம், தண்ணீர், பொதுவசதிகள் ஆகியவற்றுக்குரிய தேவைகளை முன்னேற்றுதல், வனாந்தரங்களிலுள்ள மிருகங்களால் குடியேற்றவாசிகளுக்கு ஏற்படுகின்ற அபத்துக்களை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இத்திட்டத்தின் மேலும் பல திட்டங்களாகும்.

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் தலைவர் தேசமான்ய பெராசரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உட்பட மேலும் பல அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.