தேசிய பாடசாலைகளை 1000ஆக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி

999
999

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக் கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி இதன் பொது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது .

ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும். அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .