வீதி நிர்மாணப் பணிகள் 2024ல் நிறைவு- ஜனாதிபதி

ssssss 1
ssssss 1

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார் .

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார் .

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.

போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுகள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் சுட்டுக்காட்டியுள்ளார் .

அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .