தமிழ்மக்களின்உரிமைகளை மீறுகின்றது அரசு சுரேஷ் பிரேமசந்திரன் சீற்றம்!

Tamil Nation Parties Conference
Tamil Nation Parties Conference

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களை அஞ்சலிப்பதும் நினைவுகூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும்,கடமையுமாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயாக போராளிகள் மற்றும் தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து நல்லுாாில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே ,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திலீபனுக்கு மட்டுமல்லாமல், போராளிகளையும் பொதுமக்களையும் நினைவுகூருவது எங்கள் கடமையும் உரிமையுமாகும். அதனை பயங்கரவாதம் எனக்கூறி தடைசெய்வது ஏற்புடையதல்ல.

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நினைவுகூரல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்ககூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு நாளை கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் இதனை செய்யுமா, செய்யாதா என்பதற்கு அப்பால் எமக்குப் பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். பதில் வழங்காவிட்டால் தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது.

அதனை நாங்கள் துாதுவராலயங்களுக்கும் மனித உாிமை செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.