நல்லிணக்க பொறிமுறையை ஏற்க மாட்டோம் – ஜெனீவாவில் அறிவித்தது இலங்கை

geneva upr 1
geneva upr 1

வெளியகத் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு நல்லிணக்க பொறிமுறைக்கு ஒரு போதும் உடன்பட முடியாது என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்துள்ளது.

சுமார் நான்கரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்குவதற்குத் தவறிய வெளியக தரப்பினரால் இயக்கப்படும் ஒரு கட்டமைப்பை தொடர்வதிலும் பார்க்க, நாட்டுமக்கள் வழங்கிய ஆணையின் ஆதரவுடன் அவர்களின் நலனை முன் நிறுத்திய வகையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது .

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்ட தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனை தொடர்ந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகிய விடயங்கள் பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போதே இலங்கையின் பிரதிநிதிகள் மேற்கண்ட நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தியுள்ளனர்.

அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதுடன் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மேலும் ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையை பொறுத்தவரையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதிலிருந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அடையப்பட்ட நேர் மறையான முன்னேற்றங்கள் அதில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .