நினைவேந்தலை தடைசெய்து உத்தரவிட்டால், இன்று தமிழ் கட்சிகள் சில அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும்!

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு தடைவிதித்து, தமிழ் மக்களின் உரிமையை தடுத்துள்ள கோட்டாபய அரசின் அத்து மீறலை எதிர்கொள்ள ஓரணியில் திரண்டுள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று (23) சந்தித்தனர்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இதில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், புளொட் சார்பில் பா.கஜதீபன், சுன்னாகம் தவிசாளர் தர்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ், திலீபன், தமிழ் தேசிய கட்சி சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் இன்றைய யாழ் நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கவுள்ளது. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நினைவேந்தலிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லையென அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நினைவேந்தல் தடை செய்யப்பட்டால் அடுத்து என்ன செய்வதென ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ் நீதிமன்றம் அனேகமாக 12 மணிக்கு முன்னர் தீர்ப்பையளிக்கும் என்பதால், 12 மணிக்கு மீண்டும் ஒன்று கூடுவதென தீர்மானிக்கப்பட்டது.

நினைவேந்தலை தடைசெய்து உத்தரவிட்டால், இன்று மதியம் 12 மணிக்கு கூடும் தமிழ் கட்சிகள் சில அதிரடி அறிவிப்புக்களை வெளியிடக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.