நினைவேந்தலையும் அறவழிப்போரையும் தடுக்கவே முடியாது- சஜித், அநுர கூட்டாகக் கோரிக்கை!

c7dab3ed bc0c 4aab bdce d9026aff4fca
c7dab3ed bc0c 4aab bdce d9026aff4fca

“ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு. அதையும் எவரும் தடுக்கவே முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ச அரசு கொடூர அரசு என்பது உலகறிந்த உண்மை. இந்த அரசின் அடாவடிகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் தமிழர்களை இந்த அரசு மேலும் வதைக்கின்றது.

தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தமிழ்த் தலைவர்கள் தங்கள் இனத்தின் உரிமை சார்ந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் எமது கண்டனங்களை நேரில் தெரிவித்துள்ளோம்.

ஆயுதப் போரில், அறவழிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவும், அந்த உரிமை மறுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராக அறவழியில் போராடவும் தமிழர்களுக்கு உரிமையுண்டு. அதை இராணுவத்தைக்கொண்டு அல்லது பொலிஸாரைக் கொண்டு அல்லது நீதிமன்றத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் ஈனத்தனமான செயலை இந்த அரசு உடன் கைவிட வேண்டும்” – என்றார்கள்.