தாய் போன்றதே எமது பாடசாலைகள்-விக்னேஸ்வரன்

1
1

கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் சரஸ்வதி சிலை திறப்புவிழா இன்று(30) முற்பகல் 09.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முதன்மை உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரனின் உரை பின்வருமாறு

குரூர் ப்ரம்மா..

பாடசாலை முதல்வர் அவர்களே, சிறப்பு அழைப்பாளர்களே, மதிப்புறுஅழைப்பாளர்களே, அன்புடைய சகோதர சகோதரிகளே! பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை எடுத்து வந்தபின் நான் கலந்து கொள்ளும் முதற் கூட்டம் வாணியின் சிலை திறப்பு விழாவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இதனை ஒழுங்குபடுத்திய சகலருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நோர்வேயில் இருக்கும் பழைய மாணவர்களின் அனுசரணையின் பேரில் இக் கைங்கரியம் நடைபெறுவதாக அறிகின்றேன். அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!

எம்மை ஆளாக்கிய பாடசாலைகள், கல்லூரிகள போன்றவை வெறும் கட்டிடங்கள அல்ல.அவை எம்மை வளர்த்துவிட்ட தாய்மாருக்கு ஒப்பானவை.இலத்தீன் மொழியில தாம் கற்ற கல்லூரிகளை அல்மா மேட்டர் என்பார்கள்.அன்புடைய தாயார் என்பது அதன் அர்த்தம்.தாய் போன்றதே எமது பாடசாலைகள், கல்லூரிகள் ஏன் பல்கலைக்கழகங்கள்.தாம் கல்வி கற்ற பாடசாலையை மறவாத நோர்வேயில் இருந்து வந்தவர்களை மனமார வாழ்த்துகின்றேன்.

வழக்கமாக சரஸ்வதிக்கும் பிரம்மதேவருக்கும் கோயில்கள் கட்டமாட்டார்கள் . அதாவது படைப்புக்குக் காரணமானவர் பிரம்மதேவர். படைப்புக்கு முன்னர் இருந்தவர் அவர். ஆனால் படைக்கப்பட்ட ஜீவராசிகள் படைப்புக்கு முன்னர் இருந்த வரை கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் பிரம்ம தேவரை சிலைக்குள் அல்லது கோயிலில் எழுந்தருளச் செய்யமாட்டார்கள். பிரம்ம தேவரின் பாதியாக இருக்கும் சரஸ்வதிக்கும் கோயில்கள் கட்டமாட்டார்கள்.ஆனால் சங்கானையில் ஒரு சரஸ்வதி கோயில் உண்டு. அதன் நிறுவனரிடம் இரண்டு நாட்களுக்கு முன் கேட்டேன் “எப்படி சரஸ்வதிக்குக் கோயில் எடுத்தீர்கள்?” என்று. அதற்கு அவர் “நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் எமது கோயில் சரஸ்வதி உபதேசக் கோயில் ” என்றார். அதாவது பல் கலைகள் பற்றி உபதேசம் அளிக்கும் கோயில் இது என்றார்.

எந்தக் கலை என்றாலும் அதனை நிர்வகிப்பவர் சரஸ்வதி ஒக்டோபர் 17ந் திகதி நவராத்திரி விரதம் தொடங்குகின்றது. ஒன்பது நாட்களில் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜை. அன்னை சரஸ்வதிக்கு உரிய நாட்கள் அந்தக் கடைசி மூன்று நாட்களும் சுமார் 40 வருடங்களாக நான் நவராத்திரி விரதம் இருந்து வந்திருந்தேன். ஒன்பது நாட்களும் உணவு உட்கொள்வதில்லை.சரஸ்வதி பூஜை காலங்களில் புதுப் புது கருத்துக்கள் எல்லாம் மனதை வந்தடையும்.

சென்ற நான்கைந்து வருடங்கள் என்னால் விரதத்தைத் தொடர முடியவில்லை.முடியுமானவர்கள் நவராத்திரி விரதம் பிடியுங்கள்.வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை ரியாசனத்தில் அரசரோடென்னைச் சரியாசனம் வைத்த தாய் என்று கவிஞர் பாடும் போது வெள்ளை நிறத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தெரிகின்றது.

சகலகலாவல்லி மாலையில் கவிஞர் கேட்கின்றார் – வெண்டாமரைக் கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ? என்று என் இதயமும் உன்னை நினைத்ததால் புனிதமாகின்றது.அப்படியிருந்தும் நீ வெண்டாமரையிலேயே உறைந்து நிற்கின்றாய். என் புனிதமான இதயத்தாமரையில் வந்து குடிகொள்ளமாட்டாயா? என்று கேட்கின்றார். அன்னையின் வாகனம் கூட வெள்ளை நிற அன்னப்பட்சி. அன்னம் நீரையும் பாலையும் கொடுத்தால் பாலை உறுஞ்சிக் கொண்டு தண்ணீரை விட்டு விடும் என்பார்கள். ஆகவே நல்லது கெட்டது, நன்மை தீமை, வேண்டியவை வேண்டாதவை என்று பகுத்தறிந்து கொள்ளும் திறனை அளிப்பவள் ஹம்சவாகினியாகிய தேவி சரஸ்வதி.

நல்லது கெட்டது எது என்று பாகுபடுத்தக் கற்றுத் தருகின்றார். கல்வியின் முக்கிய குறிக்கோள் அது தான். எது சரி எது பிழை என்று பகுத்துப் பார்த்து உணரக் கூடிய திறனே கல்வி எமக்குத் தரும் பெரும் பொக்கிஹம். அவளை வணங்குவோர் அந்ததிறனைத் தாமாகவே பெறுகின்றார்கள். ஆகவே இன்றைய சரஸ்வதி சிலை திறப்பானது எம் மாணவச் செல்வங்களுக்கு இனி வாணியின் அருளைப் பெற்றுத் தரும் என்று நம்பலாம். கலைவாணியை அணுகுவதால் கலைகள் உங்களுக்குத்தானாகவே வந்தெய்தும். உங்கள் படிப்பு சம்பந்தமாக உள்ளத்தில் வாணியை வேண்டுங்கள். யாதும் வந்தெய்தும். சித்திகள் கைகூடும் என்று கூறி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

நன்றி
வணக்கம்