தியாகி திலீபனை பின்லேடனுடன் ஒப்பிட்ட கெஹலிய : திலீபன் தமிழ் மக்களுக்கு தியாகி: யாழ். ஊடகவியலாளர் பதிலடி!

தமிழ் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நேற்றைய தினம் கச்சேரியில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடிய அமைச்சர்,

“திலீபன் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. பின்லேடனை நினைவுகூர அமெரிக்கா அனுமதிக்கின்றதா? இல்லையே. அது போல்த்தான் திலீபனும் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இன்று திலீபனை நினைவுகூரக் கேட்பார்கள். நாளைக்கு ‘எக்ஸ்’ஐ நினைவுகூர, ‘வை’யை நினைவுகூரக் கேட்பார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.

எனினும், உடனடியாக அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர், அல்கைய்தா இயக்க தலைவர் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருடன் திலீபனை ஒப்பிட்டு பேசுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் திலீபன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி மடிந்த ஒருவர் எனவும் அவரை இவ்வாறு கொச்சைப்படுத்த முடியாது எனவும் ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு கெஹலிய ரம்புக்வெல்ல,யாழ் ஊடகவியலாளரின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் அதற்கு பதில் அளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.