நாட்டின் பன்மைத்துவ ஜனநாயகத்தை நிராகரிக்கும் 20வது திருத்தத்தை எதிர்ப்போம் – சுரேஸ் பிறேமச்சந்திரன்

20வது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தாங்கள் முழுக்க முழுக்க சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் சரி, பாராளுமன்ற தேர்தலிலும் சரி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், மலையக தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவருமே கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த தரப்பினருக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர் என்பதும் தேர்தல் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும் அரசியல் சாசனத்துக்கான 20வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கும் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கும் சிங்கள மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக கூறி வருகின்றனர்.

1972 ஆம் ஆண்டு சிறீமா பண்டாரநாயக்க அரசினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பும், 1978 ஆம் ஆண்டு ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பும் தமிழ் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே கொண்டுவரப்பட்டது.

இந்த யாப்புகள் தயாரிக்கப்பட்டபொழுது தமிழ் மக்கள் கொடுத்த குறைந்தபட்ச கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதால் அந்த அரசியல் யாப்பு தயாரிப்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இப்பொழுது பேசப்படுகின்ற அரசியல் யாப்புக்கான 20வது திருத்தம் என்பது தமிழ் தேசிய இனமோ அல்லது தேசிய சிறுபான்மை இனங்களோ ஏற்றுக்கொண்ட ஓர் திருத்தமல்ல. வடக்கு கிழக்கு தமிழ் மக்களோ மலையக தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ 20வது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தமது வாக்களிப்பினூடக உறுதி செய்திருந்தார்கள். அதுமாத்திரமல்லாமல் சிங்கள மக்களின் பெரும்பான்மையை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏனைய தேசிய இனங்கள் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமல் கொண்டுவரக்கூடிய இந்த 20வது திருத்தம் என்பதும் ஜனநாயக விரோதமானதும் ஒருதலைப்பட்சமானதும் ஆகும்.

இலங்கை பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகளை உள்ளடக்கிய ஒரு பன்மைத்துவ சமூகம் கொண்ட நாடாகும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் பெரும்பான்மை இனமொன்றின் பெரும்பான்மை இருக்கின்றது என்ற காரணத்தினால் ஏனைய இனங்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு சர்வதிகாரத்தை உருவாக்கக்கூடிய வகையிலும் தனிமனிதனை வலுப்படுத்தும் வகையிலும் அரசியல் சாசனத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விடயமல்ல.

வெறும் எண்ணிக்கைப் பெரும்பான்மை மட்டுமே ஒரு முழுமையான ஜனநாயகம் ஆகிவிடாது. சிறுபான்மையினரின் நலன்களையும் உள்ளடக்கி அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பெரும்பான்மை முடிவைப் பிரதிபலிப்பதே உண்மையான ஜனநாயகமாகும்.

மேலும், பெரும்பான்மை இன மக்களின் உண்மையான மனநிலைக்கு மாறாக, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் அளித்த ஆணையை மீறி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒரு தனிநபரின் அதிகார வரம்பெல்லைக்குள் அடிமைப்படுத்துவதும் ஜனநாயகமாகாது.

இந்த 20வது திருத்தத்திற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஆளும் தரப்பானது எதிர்தரப்பினருடன் பல்வேறு விதமான பேரம் பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர் என்பதும் ஊடகம் வாயிலாகக் கிடைக்கும் செய்திகளாகும்.

எதிர்த்தரப்பில் இருக்கக்கூடிய தமிழ் முஸ்லிம் இனங்களை சார்ந்த யாராவது இந்த 20வது திருத்தத்திற்கு ஆதரவாக செயற்படுவார்களாக இருந்தால் மக்களுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக தங்களது சொந்த நலன், கட்சி நலன் சார்ந்த முடிவாக இருக்குமே தவிர தமது மக்களுடைய நலன் சார்ந்த முடிவாக அமையாது.

இந்த அடிப்படையில் 20வது திருத்தம் என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களோ மலையக தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ ஏற்றுக் கொண்ட ஒரு திருத்தமல்ல என்பதை பாராளுமன்றத்தில் இவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஸ். க.பிறேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இணைப்பேச்சாளர்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி