ஊடகப் பேச்சாளர் சர்ச்சை தொடர்பில் தமிழரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை என்கிறார் செல்வம்

add
add

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம் தொடர்பில் தாம் இதுவரையில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எந்தவொரு காலக்கெடுவும் வழங்கவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பங்காளிக் கட்சிகளில் இருந்து இம்முறை ஊடகப்பேச்சளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகம் ஆகியன வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகம் ஆகியன காலக்கெடு வழங்கியதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் விளக்கம் ஒன்றை பெறுவதற்காக எமது செய்திப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்டு வினவியபோது, அப்படி எந்த விதமான காலக்கெடுவும் தங்களால் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பது அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.

கூட்டமைப்புக்குள் ஊடகப் பேச்சாளர் பிரச்சனை என்பது இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதுடன் தற்பொழுது கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக தமிழசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .