பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை!

1602608794 PMO 2 1
1602608794 PMO 2 1

2019 ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை இன்று (13) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்னவினால் குறித்த காசோலை பிரதமரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 ஆயிரத்து 993 பிள்ளைகளுக்காக முதல் கட்டமாக புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்நிதி மக்கள் வங்கிக்கு வழங்கப்படவுள்ளது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தொழில் அமைச்சராக விளங்கிய 1994ஆம் ஆண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தேசத்தின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு செய்யும் உபகாரமாகவும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கேற்ப 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய ஆண்டுதோறும் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகள் 9 ஆயிரம் பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வேலைத்திட்டமானது மக்கள் வங்கியினூடாக செயற்படுத்தப்படுவதுடன், மக்கள் வங்கியினால் புலமைப்பரில் பெறும் பிள்ளைகளுக்காக குறித்த நிதி சிசு உதான சேமிப்பு கணக்கில் வைப்பிலிடப்படும். புலமைப்பரிசில் பெறும் அனைத்து பிள்ளைகளுக்கும் கணக்கு திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் வங்கியினால் மலலசேகர சிங்கள /ஆங்கில அகராதியொன்று பரிசளிக்கப்படுவதுடன், சிசு உதான கணக்கிற்கு வழங்கப்படும் சாதாரண வட்டி விகிதத்தினை விட அதிக சதவீதம் இந்த கணக்குகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்ன மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.