ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைதத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் செய்தியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சூரியன் எப்.எம். வானொலியின் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் சண்முகம் தவசீலனும், மற்றுமொரு செய்தியாளரான கணபதிப்பிள்ளை குமணனும் முறிப்பு பகுதியில் வைத்து,சட்டவிரோதமாக மரம் வெட்டும் குழவினரால் கடந்த தினம் தாக்கப்பட்டனர்.

குமிழமுனை மற்றும் முறிப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெற்று வந்த மரம் வெட்டும் நடவடிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, அவர்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர்களில் இரண்டு பேரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றுமொருவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.