மார்ச் மாதம் வரை அரசுக்குக் காலக்கெடு; மீறினால் சர்வதேச சட்டங்கள்தான் பாயும்- கூட்டமைப்பின் தலைவர் எச்சரிக்கை!

sambandhan 1561952052
sambandhan 1561952052

“இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் இனத்துக்கும் மட்டும் இந்த நாடு சொந்தமல்ல.

இங்கு மூன்று இனத்துக்குமான அரசியல் உரிமை, மொழி உரிமை மற்றும் மத உரிமை ஆகியன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆட்சியிலுள்ள அரசு சர்வதேசத்தை அவமதித்துச் செயற்பட முடியாது. அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நாட்டின் நலன் கருதிய சர்வதேசத்தின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் அரசு நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும்.

ஏனெனில், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைகின்றது. அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை இந்த அரசு சந்திக்கும்.

சர்வதேச தீர்மானங்களை நிராகரித்தால் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும். இதைக் கவனத்தில்கொண்டு ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும்” – என்றார்.