‘சிங்களவர்களை மட்டக்களப்புக்கு வரமுடியாது என்று எப்படி கூறலாம்’கூட்டமைப்பினரிடம் சீறிப்பாய்ந்தார் கிழக்கு ஆளுநர்!

dddddd
dddddd

“மட்டக்களப்பு மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது, சிங்கள மக்கள் மட்டக்களப்பிற்கு வர முடியாது என்று உங்கள் அரச அதிபர் எப்படி கூற முடியும்?” இப்படி தன்னை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் சீற்றத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் கிழக்கு மாகாண மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்.

மட்டக்களப்பில் மேய்ச்சல்தரை என்றழைக்கப்படும் மயில்ந்தமடு – மாதவணை தமிழர் பிரதேசம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இடம் மாற்றப்பட்டார்.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோ. கருணாகரம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவான், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் உதயகுமார், முன்னாள் காணி ஆணையாளர் ஆகியோர் ஆளுநரை சந்தித்து நேற்று முன்தினம் பேசினர்.

இதன்போது, இந்த விடயத்தில் மீள்பரிசீலனை செய்யத் தான் தயார் இல்லை என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாழ்வாதாரம் இழந்த சிங்கள மக்களை தொழிலுக்காக அரசாங்கம் அழைத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போதே அவர் சீற்றத்துடன் மட்டக்களப்பு மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்துள்ள ‘சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது, சிங்கள மக்கள் மட்டக்களப்பிற்கு வர முடியாது என்று உங்கள் அரச அதிபர் எப்படி கூற முடியும்?’, என்று கேள்வியும் எழுப்பினார்.

அரச அதிபர் விடயத்தில் நியாயமான தீர்வு கிடைக்காது விடின் நீதிமன்றை நாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.